உண்ணாவிரதத்தின் அபரிமிதமான நன்மைகள்

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit. Just Wait...


உண்ணாவிரதத்தின் சிறப்புகள் :


உண்ணாவிரதத்தின் அபரிமிதமான நன்மைகள்
உண்ணாவிரதத்தின் அபரிமிதமான நன்மைகள்



*உண்ணாவிரதம் வகைகள் மற்றும் நீர் விரதம் பற்றி பல அன்பர்களின் அனுபவத்தை உங்களுக்காக தொகுத்து கொடுத்துள்ளேன், நீண்ட பதிவு என்றாலும், பொறுமை கொண்டு, முழுமையாக படித்து உணரவும்...

*காலை உணவு :
தண்ணீர்

*மதிய உணவு :
தண்ணீர்

*இரவு உணவு :
தண்ணீர்


தண்ணீர் விரதம் பற்றிய அனுபவ உரை : 

முதலில் நாம் ஏன் இதை பின்பற்ற வேண்டும் என தெரிந்து கொள்ளலாம் .
1. இரத்த அழுத்தம்
2. சர்க்கரை நோய்
3. மலச்சிக்கல்
4. செரிமானம் பிரச்சனை
5. அனைத்து வகை புண்
6.  அழுத்தம்
7.  கோபம்
8.  இரைப்பை
9.  மூல வியாதி
10. உடல் வெப்பம்
11. ஆரம்ப இதய பிரச்சினை
12.  உடல் பருமன்
13. உடல் மந்த தன்மை 
14. மாதவிடாய்
15. குழந்தையின்மை 
16. இன்னும் பல பிரச்சினைகள்
எல்லாவற்றிற்கும் மேலாக கர்மவினை
எல்லாம் இயற்கையாக நீங்கும்......


              மனித உடலானது அதிசயத்திலும் அதிசயம் ஆச்சரியம் அபூர்வமான விஞ்ஞானம் கலந்த மெய்ஞானம்..

நாம் படிக்கும் படிப்பில் உன்னதமான கல்வி தான் நம் உடல் பற்றிய கல்வி...

விரதம் :

விரத்தில்  பல வகை மற்றும் பல முறை உள்ளது..

நம் வயது - வாழ்க்கை முறை - பிரச்சினை பொருத்து விரதத்தை தொடரவேண்டும். 

தொடங்குவதற்கு முன் உடல் மற்றும் மனம் பற்றிய அறிவை பெறுவது அவசியம்.

 நன்மைகள்  : 

               எடை குறைப்பில் முன்னேற்றம், மன அமைதி, நிதானம், புரிதல், உணவின் மீது காதல், அடிக்கடி ஏப்பம் விடுதலில் இருந்து மாற்றம், வாயு பிரச்சினை விடுதலை, முறையான கழிவு நீக்கம், உடலின் வளையும் தன்மையில் முன்னேற்றம்.

விரதத்தின் மூலம் உள் உறுப்புகள்  தூய்மை அடைந்து சிறப்படைகிறது...

இயற்கை மருத்துவதில் இது உடலின் உள்ள கழிவு நீக்கத்தில் ஒரு சிறந்த முறை...

      நீர் உண்ணாவிரதம் முடிந்த பின் முதலில் எளிதான செரிமானமாகும் பழ உணவுகளை எடுங்கள், பின்னர் படிப் படியாக உணவு எடுங்கள்.


          நீர் விரதம் எடுக்கும் பொது குடிக்கும் நீரில் சிறிது(ஒரு தேக்கரண்டி)கல் உப்போ அல்லது இந்துப்போ போட்டுக்கொள்வது நல்லது. விரதம் முடித்த பின் பழங்கள் மட்டுமே உண்பது நல்லது. மேலும் முதல் நாள் இரவு 7 மணிக்கும் முன்னர் உண்டுவிட்டு எடுப்பது சிறப்பு. இன்னும் சொல்ல போனால் முதல் நாள் இரவு உண்ணாமல் அல்லது பழங்களை மட்டுமே உண்டு விட்டு படுப்பது மிகவும் நல்லது. அதே வேலையில் அன்று காலையோ அல்லது முதல் நாள் இரவோ எனிமா கொடுத்து கழிவு நீக்கம் செய்துகொள்வது மென்மெலும் நன்மை தரும்...

          முக்கியமாக நான் விரதம் இருக்க போகிறேன் இன்று எனக்கு எந்த உணவும் வேண்டாமென நமக்குள் சிந்தித்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் எந்த வகை உணவாக இருந்தாலும் அதை கண்டு பசி எடுக்காது மற்றும் அன்று மட்டும் மனம் வயிற்றுக்கு கட்டளையிட்டு வயிற்றில் அமிலம் சுரப்பதை நிறுத்திக்கொள்ளும். இதுபோல மனதில் எண்ணவில்லை எனில் சமையல் வாசனையை முகர்ந்த உடனேயே வயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்துவிடும் பிறகு பிரச்னை தான்......

        பல நன்மையை தரும் நீர் விரதம் இருக்க வேண்டுமென நினைக்கிறேன் ஆனால் அடிக்கடி எடுக்க முடிவதில்லை... ஞாபகப்படுத்தியதற்கு நன்றி தோழர்.


உண்ணா விரதம் மருத்துவம் :-

       இயற்கை மருத்துவத்தில் உண்ணாவிரதம் மிகமுக்கியப் பங்கு
வகிக்கிறது. "லங்கணம் பரம ஔடதம்'' என்பது முது மொழி.
"உண்ணாநோன்பே உயரிய மருந்து' என்பது பொருள். உண்ணாவிரதம்  நமது உடலுக்கும், மனதிற்கும் குறிப்பாகச் செரிமான
உறுப்புகளுக்கும் ஓய்வு தருகிறது. இந்த ஓய்வின் போது நமது உடல்
கழிவு நீக்கத்தினை மிகச் சிறப்பாக செயல்படுத்துகிறது. இரத்தமும்,
செல்களும், உறுப்புகளும் தூய்மை அடைகின்றன.

உண்ணாவிரதம் வகைகள் :

௧) உலர் உண்ணாவிரதம் ( Dry Fasting )
௨) திரவ உண்ணாவிரதம் ( Liquid Fasting )
              ★  நீர் உண்ணாவிரதம்
                       ( Water Fasting )
                ★ சாறு உண்ணாவிரதம்
                      ( Juice Fasting )

௧. உலர் உண்ணாவிரதம். ( Dry Fasting )

       இவ்வகை உண்ணாவிரதத்தில் நீர் முதற்கொண்டு எதுவுமே
உட்கொள்ளப்படுவதில்லை. காற்று மட்டுமே உணவு. மிகவும் கடினமானது. மதங்களில் பின்பற்றப்படுகிறது, மருத்துவத்தில்
பரிந்துரைக்கப்படுவதில்லை.

௨) நீர் உண்ணாவிரதம்  ( Water Fasting )

          இவ்வகை உண்ணாவிரதத்தில் நீர் மட்டும் உட்கொள்ளப்படுகிறது. வேறு சாறுகள், கனிகள், உணவுகள் எதுவும் எடுக்கப் படுவதில்லை. இவ்வகை உண்ணாவிரதம்  மனவலிமை, உடல் வலிமை உள்ளோர் மேற்கொள்ளலாம். 

       இந்த விரதத்தின் மூலமாக உடல் எடை விரைவில் குறைகிறது,  கொழுப்பு விரைவாகக் குறைகிறது,  இரத்தத்தில் சர்க்கரை அளவும் விரைவாகக் குறைய வாய்ப்புள்ளதால் சர்க்கரை குறைபாடு உடையவர்கள், உடல் நலிந்தோர் இதனைத்
தவிர்க்க வேண்டும்.

௨) சாறு உண்ணாவிரதம் (Juice Fasting) 

           இவ்வகை விரதத்தில் தண்ணிரோடு இளநீர், பழச்சாறுகள், காய்கறிச் சாறுகள், கீரைச் சாறுகள், மூலிகைச் சாறுகள் நீர் கலந்து எடுத்துக்கொள்ளலாம். சாறுகளில் தேன், வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

                     ஒவ்வொருவரின் குறைபாடுகளுக்கு தகுந்தாற்போல் சாறுகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகின்றன. பொதுவாக இளநீர், எலுமிச்சை,
தேன் கலந்து குடிப்பது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது சிறப்புடையது.

          இவ்வகை உண்ணாவிரதம் எல்லோருக்கும் ஏற்றது. எளிமையானது. நிறைந்த பலனை அனைத்து குறைபாடுகளுக்கும் வழங்குகிறது.
உண்ணா விரதத்தை அவரவர் உடல்நிலை, மனவலிமை, குறைப்பாடு தன்மைக்கேற்ப ஒரு நாள் முதல் நீண்ட நாட்கள் வரை
மேற்கொள்ளலாம். பொதுவாக இயற்கை மருத்துவமனைகளில் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை உண்ணாவிரதம் அறிவுறுத்தப்படுகிறது. தேன் கலந்த எலுமிச்சைச் சாறும், தண்ணீரும் வழங்கப் படுகிறது. இது கழிவு நீக்கத்திற்குச் சிறப்பானது ஆகும். மேலும் இளநீர், வெண்பூசணிச் சாறு, சுரைக்காய்ச் சாறு, வாழைத் தண்டுச்சாறு, சாத்துகுடிச் சாறு, கேரட்சாறு, துளசிச் சாறு, அருகம்புல் சாறு, கறிவேப்பிலைச் சாறு போன்றவையும் தேவையைப் பொறுத்து இயற்கை மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. 
இத்துடன் தண்ணீர் அதிக அளவு குடிப்பது கழிவு நீக்கத்திற்கு உதவும்.

            உண்ணா விரதம் கடைபிடிக்கும் பொழுது  நமது உடல், மனம், செரிமான உறுப்புகள் ஒய்வு பெறுகின்றன. நமது சக்தியில் பெரும்பகுதி செரிமானத்திற்கு செலவாகிறது. உண்ணாவிரதத்தில்  செரிமானம்  நடைபெறாததால் பெரும் பகுதி சக்தி மிச்சமாகிச் சேமிக்கப்படுகிறது.
இச்சக்தி நமது உடலில் இரத்தத்தின்  உறுப்புகளில் உள்ள கழிவுகளை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது. சக்தி மாற்றம் நிகழ்கிறது. இதற்கு உதவும் வகையில் நாம் உண்ணாவிரதம் இருக்கும்  போது அதிக
அளவு தண்ணீர், சாறுகள் குடிக்கவேண்டும். இதனால் அதிக அளவு  சிறுநீர் வெளியேறும் இதன்வழியே சிறுநீரகம் பெருமளவு கழிவுகளை வெளியேற்றுகிறது.

             உண்ணா நோன்பின் போது நாம் சில இயற்கை சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதன் மூலம் கழிவுநீக்கத்தினை துரிதப்படுத்தலாம். குறிப்பாக எனிமா காலை, மாலை எடுப்பது சிறப்பு எனிமா மூலம் நமது மலக்குடலில் உள்ள கழிவுகள் எளிதாக நீக்கப்படுகின்றன. மேலும் உண்ணாவிரதத்தின்  போது மண்பட்டி, ஈரத்துணிப்பட்டி, இடுப்புக்குளியல் எடுப்பது நமது உடல் சூட்டைத் தணித்து
சிறுநீரைப் பெருக்குகிறது.

      உண்ணாவிரதத்தின் போது உடல்வலிமையுடையோர்
நீராவிக்குளியல், வாழை இலைக்குளியல், சூரியக் குளியல் எடுப்பதன் மூலம் வியர்வையைப் பெருக்கி, தோல்வழியே
கழிவுகளை வெளியேற்றலாம். மேலும் உண்ணாவிரத்தின் போது
இருவேளை குளிப்பது நல்லது.

            உண்ணாவிரதத்தில் கழிவுகள் வெளியேற்றப்படுவதால் மலம்,
சிறுநீர், வியர்வை, வாய்சுவாசம் இவற்றில் துர்வாசனை இருக்கும். மேலும் சிலருக்கு வாந்தி, பேதி, காய்ச்சல், தலைவலி, தூக்கம் குறைதல் போன்றவையும் கழிவுநீக்க முயற்சிகளால் ஏற்படலாம்.
இவற்றைக் கண்டு பயப்படத் தேவை இல்லை. இவை நோயின்
வெளிப்பாடுகள் அல்ல. கழிவு நீக்கத்தின் அறிகுறிகள் என்பதால்
கழிவுகள் நீங்கியதும் தானாகவே சரியாகிவிடும். இதனைத் தடுக்க
முயற்சிக்காமல் விரைவில் கழிவுகள் வெளியேற உதவ வேண்டும்.
குறிப்பாக எனிமா, ஈரத்துணிப்பட்டி, இடுப்புக்குளியல் எடுக்க வேண்டும். தண்ணீர் அடிக்கடி குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இடையிடையே சாறுகளும் எடுத்துக் கொண்டு தேவையான நாட்கள் வரை உண்ணாவிரதத்தைத் தொடரலாம்.


*உண்ணாவிரதத்தை முடித்தல் :


           நீண்ட நாட்கள் உண்ணாவிரதம்  மேற்கொள்வோர் கழிவுகள் முற்றிலும் நீங்கி உடல் தூய்மை பெறும் வரை உண்ணாவிரதம்  மேற்கொண்டு பின் முடிக்கலாம். கழிவுகள் நீங்கியதை உடல் பல்வேறு அறிகுறிகள் மூலம் உணர்த்தும். அப்போது முடிக்கலாம்.

அறிகுறிகள் பின்வருமாறு அமையும் :

௧. சிறுநீர், வியர்வை, துர்வாசனை நீங்கி இயல்பாகும்.

௨. வாய் துர்நாற்றம் நீங்கி நல்ல சுவாசம் அமையும்.

௩. நாக்கு மீதான வெள்ளைப்படிவு நீங்கிச் சிவப்பாகும்.

௪. வயிறு இரைச்சல், பேதி, வாந்தி, காய்ச்சல், தலைவலி நீங்கி உடல் புத்துணர்வு பெறும்.

௫. உண்மையான பசியுணர்வு தொண்டை வரை ஏற்படும்.

மேற்கண்ட அறிகுறிகள், கழிவுகள் முற்றிலும் நீங்கி உடல் தூய்மை அடைந்ததைச் சுட்டுகின்றன. 

   இந்நிலையில் உண்ணாவிரதத்தினை  மிகுந்த கவனத்துடன் முடிக்கவேண்டும். நீர் உண்ணாவிரதம்  என்றால் பழச்சாறுகள் அருந்தி முடிக்கலாம். 

         சாறு உண்ணா விரதம் எனில் சாறுள்ள பழங்களில் முடிக்கவேண்டும். ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, தர்பூசணி போன்ற பழங்கள் எடுக்கலாம். 

முதல்நாள் முழுவதும் சாறுள்ள பழங்கள் மட்டும் எடுக்க வேண்டும். 

இரண்டாம் நாள் பப்பாளி, கனிந்த வாழை, சப்போட்டா, போன்றவற்றினைச் சாறுள்ள பழங்களோடு சேர்த்து எடுக்க வேண்டும். 

  3-ஆம் நாள் பழங்களோடு மற்ற இயற்கை உணவுகள் சேர்க்கலாம். அதன் பின் சமையல் உணவு தேவையெனில் கஞ்சி,
வேகவைத்த காய்கள் சேர்க்கவும். பின் படிப்படியாக மற்ற உணவுகளைச் சேர்க்கலாம்.

    ஒரு நாளில் உண்ணா நோன்பை முடிப்போர்,   முதல் வேளை பழங்கள் உண்டு முடிக்க வேண்டும். இரண்டாம் வேளை இயல்பு உணவுக்குத் திரும்பலாம்.

         மூன்று நாட்களில் உண்ணாநோன்பை முடிப்போர், முதல் நாள், முதல் வேளை சாறுள்ள பழங்களும், இரண்டாம் வேளை கனிந்த பழங்களும் சேர்க்கவும்.  மூன்றாம் வேளையும் பழங்கள் எடுப்பது சிறப்பு. சமையல் உணவு உண்போர் மூன்றாம் வேளை கஞ்சி எடுக்கலாம். இரண்டாம் நாள் இயல்பான உணவுக்கு வரலாம்.

உண்ணாவிரதத்தின் பயன்கள் :

௧. நமது உடலுக்கும், மனதுக்கும் முழுமையான ஓய்வு கிடைக்கிறது.

௨. நமது உடல், இரத்தம், நிணநீர் அனைத்து உள்ளுறுப்புகளும் தூய்மை அடைகின்றன.

௩. செரிமான பிரச்சனைகள் மலச்சிக்கல், வயிற்றுப்பொருமல், வாயுத் தொந்தரவுகள் நீங்குகின்றன.

௪. உடல் எடை குறைகிறது.

௫.  இரத்தத்திலுள்ள கொழுப்பு (கொலஸ்ட்ரால்) குறைகிறது.

௬. இரத்தத்திலுள்ள அமிலத்தன்மை குறைந்து, காரத்தன்மை மிகுதியாகிறது.

௭. வாதநோய்கள், மூட்டுவலிகள் நீங்குகின்றன.

௮. இரத்த அழுத்தம், ஆஸ்துமா, சிறுநீரக நோய்கள், தோல் நோய்கள் எனப் பல நோய்களையும் எளிதில் நீக்குகிறது.



      உண்ணாவிரதம் பற்றி உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம் நிறுவுனர் திரு. மூ. இராமகிருட்டிணன் ஐயா அவர்கள் உரையிருந்து.........

அதிக உணவினை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்குதான் அல்சர்
வரும். ஆபிசர்கள், உட்கார்ந்து வேலை செய்யும் (White collar job) நபர்கள் காலை முதல் மாலை வரை நொறுக்குத் தீனிகள் தின்பர். அது செரிக்காமல் வயிற்றில் புளித்து புண் உண்டாக்கும். பட்டினி
கிடக்கும் ஏழைகளுக்கு அல்சர் கிடையாது.

           மகாத்மாகாந்தி, ஏசு, புத்தர் போன்றோர் உண்ணா விரதங்கள் இருந்தனர். அவர்களுக்கு அல்சர் கிடையாது. நான் நிறைய பட்டினி போடுகின்றேன். எனக்கு
அல்சர் கிடையாது. பட்டினியே போடாமல் தினமும் அதிகம் நொறுக்குத்தீனி தின்பவர்க்குத்தான் வயிற்றுப்புண்.

இடைவெளி இல்லாமல் அடிக்கடி தின்றால் செரிக்காமல் புளிக்கும், அமிலமாகமாறும், ஓட்டைபோடும்.



இன்றைய திரவ உண்ணாவிரதத்தில் நான் எடுத்துக் கொண்ட உணவுகளின் பட்டியல்கள்......


 ௧. காலை  ஏழு மணியில் இருந்து பதினொரு  மணிவரை வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தினேன்.

௨. எனிமா எடுத்தல் - காலை 8.30

*எனிமா என்றால் என்ன ?

          இயற்கை மருத்துவத்தில் மிக முக்கியமான சிகிச்சைகளுள் ஒன்று எனிமா. இது குடலைச் சுத்தம் செய்யும் சிகிச்சையாகும்.
மலச்சிக்கலே ஆதிநோய். பல்வேறு நோய்களுக்கான அடிப்படைக் காரணம் மலச்சிக்கலே. மலச்சிக்கலை முழுமையாக நீக்கும் எளிய முறை எனிமாவாகும். 

   இதற்காக வடிவமைக்கப்பட்ட சிறிய கருவியில் நீரைநிரப்பி, நீரினைக் குழாய் மூலம் ஆசன வாய் வழியே மலக்குடலுக்குள் செலுத்த வேண்டும். தேவைக்கேற்ப 300 மி.லி முதல் 2 லிட்டர் வரை நீரைச் செலுத்தி எனிமா எடுக்கலாம். 

    நீர் மலக்குடலுக்குள் சென்று மலத்தினை எளிதில் வெளியேற்றிக் குடலை முழுமையாகச் சுத்தம் செய்கிறது. இச்சிகிச்சையைப் பிறர் உதவியின்றி நின்று கொண்டு தனியாகவும் செய்யமுடியும். மிக எளிமையானது. நிறைந்த பலன்களைத் தரவல்லது. மலச்சிக்கலை நீக்குவதோடன்றி உடலையும் குளிர்விக்கிறது. காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, வாயுக்கோளாறுகள், மலச்சிக்கல், நீர்க்கடுப்பு போன்றவற்றினை நீக்குகிறது. உடல் எடை, தொந்தியை எளிதில் குறைக்க
உதவுகிறது. இரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், மாதவிடாய்த் தொந்தரவுகள், நரம்பு வாத நோய்களுக்கும் சிறந்த பலனைத்தரவல்லது.



௩  காலை 11.15 - எலுமிச்சை சாறு  + தேண்

௪. மதியம் 2.45 பி.ப  - இளநீர் ( தேங்காய் இல்லாமல் அதில் உள்ள தண்ணீர் மட்டும்)

௫.  மாலை 4.30 பி.ப  (நெல்லிக்காய் + கருப்பட்டி) சாறு

௬. இரவு 7.00 பி.ப ( பன்னீர்திராட்சை சாறு)

இடைவெளி நேரத்தில் தண்ணீர் மட்டும் அருந்தினேன்......

*குறிப்பு :-

        இந்த பதிவில் பகிர்ந்துள்ள மருத்துவ பதிவுகள் அனைத்துமே உலக நல்வாழ்வு ஆசிரமம், சிவசைலம், இயற்கை மருத்துவர். இரா. நல்வாழ்வு BNYS எழுதியுள்ள " இயற்கை மருத்துவம் மகத்துவம் " என்ற நூலிருந்து குறிப்பு எடுத்து பகிர்ந்தது.

புத்தகம் பற்றி விரிவான தகவல்கள் கீழே உள்ள இனைப்பில் உள்ளது.

https://www.facebook.com/groups/795723821300047/permalink/832395900966172/


இயற்கையோடு இணைந்து நலமுடனும் வழமுடனும் வாழ்வோம்...

                       நன்றி..............

0 Response to "உண்ணாவிரதத்தின் அபரிமிதமான நன்மைகள் "

கருத்துரையிடுக